Epilogue

Nilaprakash

Administrator
Staff member
EPILOGUE

சரியாக ஆறு மாதங்களுக்கு பின் சேலத்தின் ஒரு மிகப்பெரிய திருமண மண்டபத்தில் கல்யாண கோலத்தில் மலரும் சூர்யாவும் நின்றிருந்தனர். அன்னபூரணி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்.

மங்கை செழியன் கரிகாலன் உறவினர்களை வரவேற்க வீணா ரூபா இருவரும் திருமணச் சடங்குகளை மேற்பார்வையிட்டுக் கொண்டு இருந்தனர். பிங்கி சிங் அம்ரீத் ஜெய்வீர் சிங் என பஞ்சாபியர் கூட்டமும் அலைமோதியது.

கரிகாலனின் மொத்த குடும்பமும் அங்கே கூடி இருந்தது. கார்த்திக்கை இதே தருணத்தில் பார்த்த வலி அவர்களுக்குள் பரவினாலும் மலர் முகத்தில் இருந்த புன்னகையை தங்களால் மீண்டும் கொண்டுவர முடிந்ததே என்பதால் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை மட்டுமே அந்த நல்ல நாளில் வெளிப்படுத்த எண்ணி இருந்தனர்.

பந்தியில் இளங்கோ கருணாகரன் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கவனித்துக் கொண்டு இருந்தனர்.

அதே சமயம் சிவகாமி அர்ஜுனிடம் வம்பிழுத்து கொண்டு இருந்தார்.

“ஏன்டா இப்படியே ஒன்டிக்கட்டையாவே வாழப் போறீயா ..”

“இல்லை கௌரவமிக்க முரட்டு சிங்கிளா தாய்க்கு மகனா மட்டுமே வாழப் போறேன்”

என்று சொல்லி சிவகாமி முன் தலை கவிழ்ந்து ஆசிர்வாதம் பெறுவது போல் நிற்க சிவகாமி வாய் விட்டு சிரித்தார்.

அதே சமயம் பவன் தன் மனைவியுடன் தயங்கி தயங்கி மேடையேறினான். டிஸ்ஒபேட் சுப்ரீயர் ஆர்டர் என்று இன்னும் படையில் சேர விடாது தண்டனை கொடுத்து இருந்தான் சூர்யா.

“நீங்க ஆயுள் தண்டனை பெற்ற இந்த நல்ல நாள்லயாவது என் தண்டனையை ரிபோக் பண்ணக் கூடாதா கேப்டன்”

அவன் பேசும் தமிழ் அவன் மனைவி தன்யாவுக்கு புரியாததால் முத்து மொழிப்பெயர்க்க மேடையிலேயே அவனுக்கு அடி விழுந்தது.

“டேய் முத்து ..சும்மா இருடா”

பவன் கத்த

‘இது என்ன பிரமாதம் இதை விட ஸ்பெஷல் ஐடம் ஒண்ணு இருக்கு..’ என்பது போல்

“இதுக்கே இந்த அடி அடிக்கீறிங்க..நீங்க அவரோட மேரேஜ் பர்மிஷன் லட்டர் பார்க்கலையே”

முத்து சொல்ல பவன் அவனைத் தடுக்க இம்ரான் தன்யாவுக்கு அதை மொழிப்பெயர்த்துச் சொன்னான். தன்யா அவனிடம் மேலும் சண்டையிட மலர் உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

கீழே இறங்கிய முத்துவை அழைத்தான் அர்ஜூன்.

“என்ன கேப்டன் இங்கேயும் சர்விங் வேலை பார்க்கணுமா”

முத்து சல்யூட் அடித்து நிற்க

“அதெல்லாம் வேண்டாம் ஒரு நல்ல பொண்ணு இருந்தா பாரு”

என்று சொல்லி அர்ஜுன் நகர ஜெய்வீர் விஜய் இருவரும் நமுட்டுச் சிரிப்பு சிரித்தனர்.

ஜெய்வீர் சேலத்தில் இருந்த வெப்பத்தைக் கண்டு முத்துவிடம் சலித்துக் கொண்டான்.

“என்னடா ஊரு இது? மைக்ரோ வேவ் அவன் போல்”

விஜயும் ஆமாம் என்று சொல்ல முத்து விஜயின் கழுத்தோடு பிடித்தான்.

“டேய் அது அவன் சொல்லலாம் தப்பு இல்ல பீகாரிலிருந்து வந்துட்டு வெயில் பத்தி பேசுறியா..?”

மூவரும் ஒருவரை ஒருவரை அடித்துக் கொண்டிருந்தனர். அதே சமயம் மயில்கழுத்து நிற பட்டு சேலையில் அழகான வெள்ளை கல் நகைகள் அணிந்து புன்னகையோடு நின்று இருந்தாள் மலர்.

மறுமணம் என்பதால் மிக எளிய திருமணமாகத் தான் அவளது திருமணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சூர்யா அதை மிகப்பெரிய அளவிலேயே செய்யச் சொன்னான். மலர் அதைக் குறித்து கேட்க அவள் கரங்களைப் பிடித்துக் கொண்டான்.

“மல்லிப்பூ வி ஹேவ் டு நார்மலைஸ் தீஸ் திங்ஸ் (இந்த மாதிரி தருணங்களை இயல்பாகக்கணும்) சந்தர்ப்ப சூழ்நிலையில் ஒரு பெண் இன்னொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் பொழுது அதுவும் அவளுக்கு பிடிச்ச மாதிரியே நடக்கலாம்.. யாருக்கும் தெரியாமல் நடக்கணும்னு அவசியம் இல்ல ..நம்ம வாழ்க்கை மல்லிப்பூ… நமக்கு பிடித்த மாதிரி நாம வாழணும்.. மற்றவர்களை காயப்படுத்தாத வரை.. அவமானப்படுத்தாத வரை.. கெட்டது செய்யாத வரை.. எதை செய்யவும் தயங்க வேண்டியது இல்லை.. யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை..”

சூர்யா சொன்னது போலவே திருமணம் மிக அழகாக நடந்தது. சரண் ஜெனி இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் ஜெர்மனியில் இருந்து வந்திருந்தனர் ஒவ்வொருவராக அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுப்பவர்கள் மேடையேறினர். அங்கே நிறைந்திருந்தது சூர்யாவின் நட்பு வட்டாரங்கள். உறவு கூட்டங்களை விட நட்புக் கூட்டங்கள் மிக அதிகமாகவே தென்பட்டது எனலாம்.

சற்று நேரத்தில் ஒரு தம்பதியர் சிறுவனுடன் மேடையேறினர். அழகிய ரோஜாப்பூவை மலரின் கைகளில் திணித்து அவளை அணைத்துக் கொண்டான் அந்த சிறுவன். அந்த திடீர் பாசத்தில் புன்னகைத்தவளாய் அவள் சிரிக்க

“பிரின்சஸ் ..லிவ் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்”(கார்டூனில் வரும் வாக்கியம்.. இது முதல் எப்போதும் மகிழ்ச்சியாக வாழு இளவரசியே)

என்றான். அவன் பேசிய விதமும் அந்த மழலை குரலும் அந்த வார்த்தைகளும் எல்லோர் முகத்திலும் சிரிப்பை வரவழைக்க சூர்யா அவனைத் தூக்கி தன் கைகளில் ஏந்த அவனோ மலரின் கன்னத்தில் முத்தமிட்டான். சூர்யா சற்றே திடுக்கிட்டு சிரித்தவாறே அவனை அணைத்துக் கொண்டு உன் பெயர் என்ன என்று கேட்டான்.

அச்சிறுவனோ கார்த்திக் என்று மழலைக் குரலில் உச்சரிக்க மலர் தன் கண்களில் நிறைந்த கண்ணீர் வழிய அப்படியே நின்றாள். சூர்யா காதலுக்கே உரிய புரிதலோடு அவளது கரங்களைப் பற்றி அவளை அணைத்துக் கொண்டான்.

காதல் எவ்வளவு அழகானது. வலிகளைத் தாண்டி.. காயங்களைத் தாண்டி.. காமம் தாண்டி… ஒரு உயிரை தன்னை விடவும் அதிகமாய் நேசிக்க செய்யும் காதல்தான் எவ்வளவு அழகானது..!!!!

கவிதை

ஒரு முத்தத்தின் ஈரத்தில்
முடிந்து விடுமா என்ன ?
பெறுவதும் கொடுப்பதுமாக
எல்லைகளற்றுத் தொடர்கிறது
அவனது அன்பின் நினைவுகள்!!!

முற்றும்

என்றும் அன்புடன்

நிலா பிரகாஷ் ❤️
 
Back
Top